Tuesday, March 22, 2011

என் அம்மா



எங்கோ எப்போதோ ஒரு திருமண விழாவில், சிதறிய முத்துக்களாய் சிறகடித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், தங்கள் அம்மாக்கள் சாப்பிட அழைத்த போது, ஒரே வினாடியில் ஓடி அவர்களை கட்டிப் பிடித்துக் கொண்ட காட்சி என்னை மிகவும் கவர்ந்தது.

விதவிதமான குழந்தைகள், பல நிறங்கள், பல்வேறு முக அமைப்புகள் கொண்ட அனைவரும் தத்தமது தாய்மார்களை வினாடியில் இனம் கண்டு தேடிப் பிடித்தது மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது.

பல வருடங்களுக்குப்பின் ஷார்ஜாவில் நான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில், எனது பால்கனியில் பல புறாக்கள் முட்டையிட்டு குஞ்சு பொறித்திருந்தன. அவற்றில் எல்லாமே ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றும். ஆனால் அந்த நூற்றுக்கணக்கான புறாக்களின் குஞ்சுகள் தங்களின் தாயையும், தந்தையையும் மிகச் சரியான இனம் கண்டு கொள்வது எனக்கு இன்றளவும் பேராச்சரியம். திடீரென ஒரு பெரிய அரவம் கேட்டால், அதிர்ந்து பறக்கும் அவற்றுள் எனது செல்லப் புறா எது என்று என்னால் கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

தாய்க்கும், குழந்தைகளுக்குமான பிணைப்பு, ஒரு கண்ணுக்குத் தெரியாத மானசீக சங்கிலியாய் இந்த பூமிக் கிரகம் முழுவதும் வியாபித்து இருப்பது போன்ற ஒரு உணர்வு எனக்கு எப்போதுமே உண்டு.

இதனடியில் வரும் கவிதை ஏறக்குறைய இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இப்போது இதனை மிக அழகாக திருத்தி பிரசுரிக்க என்னால் இயலுமென்றாலும், இதை ஆத்மார்த்தமாக எழுதிய அந்த இளம் கவிஞனுக்கு உரிய மரியாதை தரும் வகையில் அதை அப்படியே தருகிறேன்.

இதோ ..... உங்களுக்காக1





என் அம்மா

'' உலக அழகி வருகை ''
தெருவோரப் பிச்சைக்கார சிறுமி
எழுத்து கூட்டி படித்தாள்.

அழகி என்றால் என்ன?
மனதிற்குள் குழப்பம் - நேரில்
கண்டறியவும் ஆவல் - ஆனால்
இங்கே வறுமையின் நிறமோ
வயிற்றில் சுற்றியுள்ள
ஈரத்துணியின் சிவப்பு.

அதோ அம்மா !
நல்ல கருப்பு நிறம் - மிகவும்
எடுப்பான மஞ்சள் பற்கள்.
சடை சடையாய் தொங்கும்
எண்ணையறியாத் தலைமுடி.
மூடிக் கிடக்கும் அந்தக்
காதுகளின் துளைகள்.
இனி கிழிக்க முடியாத
கந்தலுடை.

'' பாப்பா .... உனக்கு ரொட்டி ''
உள்ளன்புடன் அருகே
இழுத்தணைத்து பரிவுடன்
ஊட்டி விடும் என்
இவ்வுலகத்துணை - ஆம்
ஒரே துணை.

மறுநாள், ........
ஆதவன் சுடர்விட்டெழுந்தான்.
வழக்கம் போல் கடமை தவறாமல்
குப்பை பொறுக்கும் அன்றாட வேலையில்
அமிழ்ந்திருக்கையில் பரபரப்பு.

'' அதோ அதோ, .... அந்த
உலக அழகி வருகிறாள் ''
எங்கும் ஆரவாரம்.

செத்த எலியைத் தேடிவரும்
காக்கைக் கூட்டத்தின்
கா .... கா .... கா .... அவலம்.

மெல்ல எட்டிப் பார்த்தாள்
அந்த அழுக்கு சிறுமி.

'' அதோ அவள்தான்
நேற்று பேருந்தினில் சிக்கி
உயிர் விட்ட பன்றியின்
இரத்தத்தின் நிறம் ''

இவளா உலக மகா அழகி !
மனதில் கேள்விக்குறி.

'' எந்த விதத்தில் இவள் அழகி
என் அம்மாவை விட ? ''

Monday, March 21, 2011

அசோகன்

கலிங்கத்துப் போருக்குப் பின் சாம்ராட் அசோகன் மகா அசோகனாக மாறிய கதையை சிறு வயதில் பள்ளியில் நாடகமாய் பார்த்தேன். அப்போது எட்டு வயது சிறுவனாய் இருந்த என்னை அந்த அசோகன் மிகவும் கவர்ந்து விட்டான். பிறகு 10 வயதில் அவனைப் பற்றிய கதைகளைப் படித்த எனக்கு, வெகு ஆண்டுகள் அதன் பாதிப்பு இருந்தது. அதையொட்டிய ஏராளமான கேள்விகள் என் மனதில்.

மாபெரும் தேசத்தை வென்றெடுக்க, இலட்சக்கணக்கான உயிர்களை பலி கொடுக்கவும் தயங்காத, அந்த கோர அசோகன் போருக்குப் பின் பெளத்த அசோகனாய் மாறி, விலங்குகளுக்குக் கூட ஆதுர சாலைகளை அமைக்கும் அளவிற்கு கருணை உள்ளத்தினனாய் மாறிய இரசவாதம் எங்கனம் நிகழ்ந்திருக்கக் கூடும் என்கிற சிந்தனை என்னுள் இருந்து கொண்டேயிருந்தது.

அப்போது எனக்கு வயது இருபது. ஒரு நாளிரவு, சிறுவயதில் எங்கெங்கோ படித்த கதைகளின் பாதிப்பினால் உறக்கமின்றி புரண்டுகொண்டிருந்த என் கனவில், என்னைக் காண மகா அசோகரே நேரில் வந்தார்.

அவர் தனது கருணை மிகுந்த குரலில், என்னிடம் விவரித்த பல சம்பவங்களில், என் உள்ளத்தை கொள்ளை கொண்ட நிகழ்ச்சியை மறு நாள் காலையில் ஒரு சிறு புதுக் கவிதையாக்கினேன். 



அது இப்போது அனைவருக்கும், ..........



கலிங்கத்துப் போர் !
அசோகனுக்கு மண்ணாசை !
அகிலமெல்லாம் ஆள வேட்கை !
போர் ! போர் ! போர் !
கொலை ! கொலை ! கொலை !
அமைதி ! அமைதி ! நிசப்தம் !
இரவினில் களம் புகுந்து - தன்
சாகசத்தின் ஆழம் காண நடைபோடும்
அசோக மன்னன்.

சக்கரவர்த்தியின் - இதய
சிம்மாசனத்தையே
அசைத்து விட்ட
சரித்திரப் படுகொலை !

மன்னன் முனிவனான் !
விடுமா உலகம் ?

அமைச்சனை அழைத்தான் அரசன்.
விலக்கிடு போரை !
கலைத்திடு படையை !
பெருக்கிடு அன்பை !
பரப்பிடு பெளத்தத்தை !
விதைத்திடு சமாதானத்தை !
என்றான்

மந்திரி மதியூகி !
மன்னன் மனநிலையில்
மாற்றம் வேண்டுமென
உடனே கேட்காமல்,
இரு தினம் கேட்டான் அவகாசம்.

இரவு நகர்வலம் !
மன்னனும், மந்திரியும்.
அமாவாசை இரவு.
தொட்டு, கரிய பொட்டு
வைத்துக் கொள்ளும்
கும்மிருட்டு.

எதிரே ஒருவன் !
பிரகாசமான விளக்குடன் !
அமைச்சனும், மன்னனும்
அருகினில் சென்றனர்.
தன் வழியே போகாமல்,
தானே எதிரே வந்து
மோதினான் மன்னன் மேல்.

பொங்கி எழுந்தான் மன்னன்.
இவ்வளவு வெளிச்சத்தில்
ஏன் என் மீது மோதினாய்?
உனக்கென்ன கண் குருடா ?
எனக் கேட்ட மன்னனுக்கு
அமைதியாய் சொன்னான்
அந்த அந்தக மனிதன்
"ஆம்''
அதிர்ந்தான் மன்னவன்.
ஆச்சரியமாய் கேட்டான்
பிறகேன் உனக்கு விளக்கு ?
அதுவும் பிரகாசமாய்.

பதிலிருத்தான் குருடன்.
இருட்டு எனக்கு தாய் வீடு.
இவ்வுலகமே எனக்கு
காலடிகளின் கணக்கில்தான்.

உன்னைப் போன்ற ஒளிவிழி மக்கள்
என் மீது வந்து மோதி - என்னை
மண்ணில் தள்ளி விட்டால்
காலடி மீது கவனம் சிதறிப் போகும்
வேதனைதான் மிஞ்சும்
வீடு போகும் வரை
என்றனன்.

மன்னன் மதியூகி மந்திரியை
தீர்க்கமாய் பார்த்து சொன்னான்.
படை பலத்தை நிலைக்க செய் !
பயிற்சி கொடு ! எதிரியைத் தடு !
விளைச்சலை காத்து நில் !
ஆநிரையை மேய்த்து நில் !
மகளிரைப் போற்றி நில் !
அன்பைப் பற்றிக் கொள் !
ஆதரவைத் திரட்டிக் கொள் !
அமைதியாய் வாழக் கற்றுக் கொள் !
இது அரச கட்டளை !
என்றுரைத்தான்.

மதியூகி மந்திரி
மெளனமாய் சிரித்தனன்.
என் திட்டம் பலித்தது.
இவன் இனி
மன்னனுமில்லை
முனிவனுமில்லை
'' ராஜரிஷி ''

Sunday, March 20, 2011

அன்னை தெரேசா


செப்டம்பர் 5, 1997. மறுநாள் எனது பிறந்த தினம் செப்டம்பர் 6.

மறுதினம் என்னென்ன செய்யலாம், யார் யாரைப் பார்க்கலாம் என்றெல்லாம் திட்டமிட்டுக் கொண்டிருக்கையில் திடீரென ஒரு இடி போன்ற கொடுஞ் செய்தி. அன்னை தெரேசா காலமானார். எல்லா திட்டங்களும் கைவிடப் பட்டன. அந்த பேரன்னையின் மறைவு என் நெஞ்சை மிகவும் வருத்தியது. எனது 29-ம் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்பு நிகழ்ந்த அக் துயரத்தினை என் மனம் ஓர் கவிதையாய் வடித்தது.

ஓவ்வோர் உயிரினமும் தனது சோகத்தை, தனது குரலில் பதிவு செய்யுமே ! அது போல எனது இக் கவிதை எனது ஆன்மாவின் குரலாய் உருவெடுத்தது.



இதோ, .... அது எல்லோருக்குமாக .............. 




அன்னை தெரேசா


இறைவன் படைத்த படைப்பிலேயே
எல்லையில்லாத கருணையை
அள்ளி வழங்கிய அருட்கொடை நீ !

உன்னிதயம் இந்த
பூமிப்பந்தை விட விசாலமானது.

நாடுகளைப் பிரிக்கும்
எல்லைக் கோடுகள் இல்லை
உன் உலகளாவிய மனதிற்கு.

மக்களை பிரிக்கும்
சாதியும், மதமும்
உன் கூப்பிய கரத்திற்கு
முன் மதியிழந்து செயல் மறக்கும்.
கருப்பு, வெள்ளை, .........
நிறங்களின் பேதம் உனக்கில்லை.

உனக்கென ஒரு நாடில்லை,
மதமில்லை, மொழியில்லை.
எல்லா நாடும் உன்னுடையது,
எல்லா மதமும் உன்னுடையது.
எல்லா மொழியும் உன்னுடையது.
எல்லா மக்களும் உன்னுடையர்.

உன் அரவணைப்பில் இருக்கும்
நோயுற்ற உயிரைப் பறிக்கும் முன்
அந்த இறைவன் கூட, ......
உன் எல்லையில்லா மானுடத்தின்
மகத்தான சக்தி கண்டு
ஒரு கணம்
மெய் சிலிர்த்துப் போவான்.

உனக்கென சொந்தமென
சொத்து ஒன்றுமில்லை
என்பார் சிலர்.
நீதான் இவ்வுலகின்
விலை மதிப்பில்லா சொத்து.
உனக்கென ஏன் தனி சொத்து ?

தன்னுடைய படைப்பில்
கடை மட்டப் படைப்பாய்
யாருமற்ற அனாதைகளை
இறைவன் படைத்து விட்டான்.
அவன் செய்த தவற்றினை
உன்னைப் படைத்து
கணக்குத் தீர்த்தான்.

எல்லா எளியோருக்காகவும்
நீ கண்ணீர் உதிர்த்தாய்.
உன் மறைவுக்கு இவ்
உலகமே கண்ணீர் வடித்தது.
எச்சிலைக் கூட
பிச்சையாய் பெற்றாய்.
இரந்தும் கூட
இல்லையெனாக் கொடுத்தாய்.

தொழுநோய் கண்டு
மெல்ல அழுகும் மனிதம் கூட
உன் அருகாமையால் மகிழ்ந்தது.
இவ் உலகம் ஒதுக்கினாலும்
உன் கரம் பட்டு சிலிர்த்தது.

கத்தியில்லை, இரத்தமில்லை - உன்
ஒரு புன்னகைக்கு முன்னால்
இவ்வுலகம் கை கட்டி நின்றதை
காலம் வேடிக்கை பார்த்தது.

உலக சரித்திரத்தில் உன்னளவு
மக்களை வசீகரித்த பெண்ணில்லை.
நீ உடுத்த வெண் புடவை
பூமிப் பந்து போர்த்திய
மானுட நேயத்தின்
தேசிய உடையானது.

இந் நூற்றாண்டில்
இறைவன் படைத்த
கருணையின் மொத்த வடிவான
கலைப் படைப்பு
நீதான்.

உன் பெயரை
யார் வேண்டுமானாலும்
சூடிக் கொள்ளட்டும் - ஆனால்
உன் " அருளன்னை " என்கிற
அடைமொழியை யாரும்
திருடிக் கொள்ள முடியாது.

அது, ...........
உனக்கென நீ
அறியாமல் சம்பாதித்த
ஒரே சொத்து.

உன் பெயர் இவ்வுலகில்
அன்பைத் தேடுவோர்
உள்ளவரை நிலைத்திருக்கும்.

புயலடித்தால் ....... அன்னை தெரேசா,
அடை மழை பெய்தால் ... அன்பு தெரேசா,
வெள்ளம் வந்தால் ... மதர் தெரேசா,
பஞ்சமென்றால் .... சகோதரி தெரேசா.

எத்தனை வடிவங்கள் உனக்கு !
இருந்தாலும் நீ மாறி விடவில்லை.
உன்னை இந்த
புகழும், பணமும்
எம்மிடமிருந்து
பிரிக்க முடியவில்லை
இறுதிவரை !

உன் கனிவான பார்வைக்கென
பல நாடுகள் காத்திருந்த போதும்
நீ எமெக்கென உன்னை அர்ப்பணித்தாய்.
எம் இதயம் நுழைந்து, உயிரில் கலந்தாய்.

உலக மக்கள்
உன் இழப்பிற்கு பிறகு
ஒட்டு மொத்தமாய் இறைவனிடம்
வேண்டும் வரம், ........
மீண்டும் நீ பிறக்க வேண்டும்.

உன்னை இயற்கை
எம்மிடமிருந்து பிரித்த போது
மலைத்து போனது !

எத்தனை மொழிகளில் அழுகை,
எத்தனை மொழிகளில் பிரார்த்தனைகள்,
எத்தனை கோடி விழிகளில் கண்ணீர்,
பூமி கிரகத்தை
சோக மேகம்
சூழ்ந்து கொண்டது.

அந்த சூரியன் கூட
கண்ணீர் வடியும்
விழிகளின் ஊடே
கலங்கலாய் தெரிந்தான்.

இதுநாள் வரை
உன்னால் உயிர்த்த
உயிர்கள் எல்லாம்
நாளை எண்ணி
கல்லாய் சமைந்தன.
ஆம் - நீ இறந்த
நாளை எண்ணி
கல்லாய் சமைந்தன.

இது போல்
இனியொரு படைப்பை
என்னால் மீண்டும்
படைக்க இயலுமா?
இறைவன் கூட
ஒரு கணம் திகைத்தான்.

எம் தாயே, ........

கொடிய ஆயுதங்கள்
எல்லாம் உள்ளோரை
மட்டுமே மிரட்டும்.

உலகமே உனதென்றாலும்
உனக்கென ஏதுமில்லை.

அணு ஆயுதங்கள் கூட
உன்னிடத்தில் மண்டியிட்டு
வணங்கி நிற்கும்.

வாழி நீ பல்லாண்டு !

Saturday, March 19, 2011

அணிவதெதை?


பத்தாண்டுகளுக்கு முன், .......

எனக்கு திருமணத்திற்கு ஏற்பாடு நடக்கிறது என்று கேள்விப்பட்டவுடன் மிகவும் திகைப்பாயிருந்தது. அந்நிகழ்வு என்னில் என்னென்ன மாற்றங்களைக் கொண்டுவருமோ? நான் நானாக இல்லாமல் முழுவதுமாய் மாறிப் போய்விடுவேனோ என்கிற அச்சம் என்னுள் துளிர்த்தது. அதன் விளைவே இக் கவிதை.

யாரென்று முகம் தெரியா அப் பெண்ணிடம் எனக்கு ஏற்பட்ட அச்சம் இன்று வரை மாறாத ஒன்று என்ற வகையில், இன்றளவும் எனக்குப் மிகவும் பிடித்த எனது கவிதைகளில் இதுவும் ஒன்று.


இதோ உங்களுக்காக, ..........


அணிவதெதை?



உன்னை யெண்ணிதான்
இத்தனை அமளியும் !
என்னென்ன நடக்குமென
என் உள்ளில் சதா உருளும்
கர கர தகரக் குவளை.

அச்சம் எனை வாட்டுகிறதே
அருமைத் தோழீ.
ஏனோ தெரியவில்லை என்னில்
மணம் என்றவுடன்
குழப்ப மேகங்கள்.

என்னென்ன செய்திடுவாயோ
என்னில் நீ !
என்ற பயம் எனக்குள்.
உன் வரவால்
என்னென்ன உருமாறுமோ ?

பிறர் தூங்கும் நள்ளிரவில்
பேயென விழித்திருந்து
இலக்கியம் படிக்கும்
என்னுள் குடியிருக்கும்
கலகக்கார இலக்கியவாதி
உன் திடீர் வரவைக் கண்டு
நிலைகுலைந்து போவானே !
சத்தமின்றி அவனை நீ - சாக
விட்டுவிட்டால் என்னாவேன் நான் ?

உருண்டு திரண்ட தோளினைத் தட்டி
உருட்டு பிரம்பு காற்றில் சீற
பம்பரமாய் கம்பு சுற்றி
படை மிரட்டி விளையாடும்
முரட்டு இளைஞன் -
நாளை முதல் நான்
தழைய வேட்டி கட்டி, தாடி சிரைத்து,
தணிவாய் நடந்து, கனிவாய் பேசினால்
எங்கே போய் குடியிருப்பான் என்னிலிருந்து ?

எளியவர் மிதிக்கப் பெற்றால்
எங்கிருந்தாலும் சங்கென முழங்கி
சமுதாயத்திற்கே சவால் விடுக்கும்
என்னுள் குடியிருக்கும்
கோபக்கார வாலிபன் உனைக் கண்டு - தன்
கோர முகம் எதில் மறைப்பான்?

சூரியன் கிழக்கிலா? மேற்கிலா?
இது இரவா? பகலா?
நீவிர் நண்பரா? பகைவரா?
நாவலா? கவிதையா?
தழுவலா? இயற்றலா?
புன்னகையா? கோபமா?
விருந்தா? பசியா?
புகழா? இகழா?
எல்லாமே வாழ்வென மகிழ்ச்சியாய்
வாழ்ந்து வந்த அந்த தத்துவ ஞானி
உன் கண் பார்வையில் படாமல்
தன் பிச்சை பாத்திரத்தை
எங்கே ஒளித்து வைப்பான்?

கலைந்த புத்தக மூட்டைகளிடையே
உறங்கிப் பழகிய பள்ளிச் சிறுவன்
கனவுலகிலிருந்து திடுக்கென
பிடுங்கிப் போடப்பட்டு
குலைந்த தூக்கத்துடன்
மிரள எழுந்தமர்ந்து
அழகாய் நீ அடுக்கி வைத்த
புத்தக அலமாரியையும்
அருகினில் பளிச்சென்றிருக்கும்
வெற்றுத் தரையையும்
திரும்பித் திரும்பிப் பார்த்து
வார்த்தைகளற்று ஏதோ இழந்ததாய்
உறக்கம் விழித்தும் பிதற்றும்
என்னினிய அப் புத்தகப் பிரியனை
இனி எங்கே போய் தேடுவது?

விடிந்து வெகு நேரமாகி
மதியம் நெருங்குகையில்
மெல்லக் கண் விழிக்கும்
பின்னிரவு சிந்தனாவாதியின்
உள்ளே உறங்கும் யதார்த்தவாதி
உன் அதிகாலை பூபாளத்தை
எந்தக் காதால் கேட்டு இரசிப்பான்?

செய்தித் தாளில் கண்விழித்து
சோம்பலுடன் தேநீர் பருகி
மெல்லத் திரும்பி கடிகாரம் நோக்கி
மணி ஒன்றா? இது மதியமா?
செல்லக் கேள்வி தனக்குள் கேட்கும்
புத்திளம் கனவுலகை படைக்க நினைந்து
தினந்தோறும் நினைவுகளுடன் போராடி
விடிய உறக்கம் கொள்ளும்
தத்துவார்த்த முது மனிதன்
இரவு மெல்லப் பிரியும் அதிகாலையில்
பளீரிடும் உன் மஞ்சள் முகம்
கண்டு வியப்பது எப் பொழுது?

நாளைய நினைவேட்டு பக்கத்துடன்
இன்றைய நனவேட்டில் எழுதத் தெரியா
முப்பதைக் கடந்த முக்கால் முதியவன்
முழுவதையும் கடக்க
இருபதைத் துணைக்கனுப்பும்
விசித்திர மனிதர்காள் !
சற்றே விளக்குவீர்.

என் பல்வேறு முகமூடிகளில்
நான் இனி அவளுக்கென
சாஸ்வதமாய்
அணிவதெதை?

பூம்புகார் கல்லூரி - 1


மறக்கவியலா ஸ்பரிசம்

1989-ம் வருடம் நான் பூம்புகார் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் மூன்றாமாண்டு படித்து வந்தேன். எனக்கு மிகவும் பிடித்த பேராசிரியர்களில் தமிழ் துறைப் பேராசிரியர் திரு. டி. தியாகராஜன் அவர்கள் மிகவும் முக்கியமானவர். மிக மென்மையான மனதுக்கு சொந்தக்காரர். மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் ஒரு குழந்தையைப் போல சப்தமிட்டு சிரிப்பார். மற்றவர்கள் துயரமான சம்பவங்களை சந்திக்க நேரிடுகையில் அவர்களுக்காக கண் கலங்குவார். பழகுவதற்கு மிகவும் எளிய, நல்ல மனிதர்.

எனக்கு வகுப்புகள் இல்லாத நேரங்களில் மற்ற வகுப்பறைகளைக் கடந்து, சிற்றுண்டி சாலையை நோக்கி நண்பர்களுடன் கூட்டமாய் பேசிக் கொண்டே போகும் போது, இடையிலே எந்த வகுப்பிலாவது பேராசிரியர் திரு. டி. தியாகராசனார் தமிழ் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் என்றால், நான் உடனே அந்த வகுப்பறையின் வாயிலிலே அழையா விருந்தாளியாக போய் நிற்பேன். நீதிமன்றங்களிலே சற்றே தலை சாய்த்து உள்ளே நுழையும் வழக்கறிஞர்கள் போல நானும் சற்றே தலையை சாய்த்து அனுமதி வேண்டி, அனுமதிக்கும் முன்னே மிடுக்காய் உள்ளே நுழைந்து, கடைசி இருக்கையிலே அமர்ந்து விடுவேன். அடுத்த சில மணித்துளிகள் தமிழமுது பருகுவதில் மகிழ்ச்சியாய் கரையும்.

அந்த வருடம் பேராசிரியர்களிடையே ஏதோ சிறிய பிரச்சனை வந்து, அது மிகவும் முற்றி, சிலர் கை கலக்கும் வரை சென்றுவிட்டது. மாணவர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். அப்போது பேராசிரியர் திரு. டி. தியாகராசனார் அவர்கள் மிகுந்த மனக் கலக்கத்துடன் இருந்தார். அவரிடம் பேசும் போது '' வேலையை விட்டுவிடலாம் என்று கூட நினைத்துவிட்டேன் தம்பி '' என்றார். அது என்னை மிகவும் பாதித்து விட்டது.

அன்று அவருக்காக ஒரு கவிதை எழுதினேன். அப்போது எனக்கு வயது 18-ம் சில மாதங்களும். என்றாலும் கூட இன்றளவும் அக்கவிதையைப் படிக்கும் போது நான் அன்று இருந்த அந்த உணர்ச்சிப் பெருக்கை என்னால் உணர முடிகிறது.

அக்கவிதையை எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, 


இதோ, ......... இளம் கவியின் கவிதை, ..........

இறைவன், ...........
பட்டாம்பூச்சியின் வாலில்
நூல் கட்டி விளையாடும்
மூடன் !

உலகம் உருண்டை.
அது போல் நம் வாழ்க்கை.
ஆரம்பமும் முடிவுமின்றி !
புறப்பட்டால் அது
போய்க் கொண்டேயிருக்கின்றது
வட்டத்தைப் போல !

மனித குலம் என்ற பெயரில்
அரக்கர்களிங்கு ஏராளம்.
நீ மனிதனாயிரு - ஆனால்
மற்றவர்களை எதிர்பார்க்காதே !

நீ, ................
துளிர் விடுகையில்
கிள்ளப்படுவாய் !
அதனால் தளராதே - ஓர்
புதிய உத்வேகத்துடன்
கிளைத்து வளர்.

ஆல் போல் வேர் விடு.
கிளைகளை படர விடு.
அடியில் வளரும்
அற்பப் புற்களை
அலட்சியம் செய் - உன்
கம்பீர நீழலால் அவை
பூண்டற்று போய் விடும்.
உன்னிடமிருக்கும் குறைகளை
இலைகளென உதிர்த்து விடு.
அவை உரமாகி உனக்கு
ஊட்டமூட்டட்டும்.
உன் அறிவை, திறமையை
வளர்த்துக் கொள்ள
தேடுதல் வேட்டையைத் தொடங்கு.
விழுதுகளை மண்ணிற்குள்
புதைத்து உயிர் சத்தைத்
தேடு ! சேகரித்து வை !!

விழுதுகள் உனக்கு குழந்தைகள் !
உடல் தளர்கையில் அவை
ஆன்மாவை பலமாக்கும்.

களைப்பு - மனித இயற்கை !
உடலுக்கு ஓய்வு தேவை.
மனதிற்கு ஏது ஓய்வு ?
மனம் ஓய்வெடுத்தால் - உன்
மனிதப் பிறவிக்கு அர்த்தமில்லை.

நீ ஆதவன் - எம் உலகை
உய்விக்க வந்தவன்.
உனக்கு அழிவில்லை !
ஆசிரியனுக்கேது அழிவு ?
காலங்காலமாய், குரு பரம்பரையாய்
நிலைக்கும் உன் அமரத்துவம் !

அறிவுப் பிரபஞ்சத்தின்
தற்கால சூரியன் - நீ !
இருண்ட துருவங்களை மறந்து விடு.
உன்னொளியால் காயும்
கடலைப் பார் - அதனால்
கருக் கொள்ளும் கார்முகிலைப் பார்.

உழவனின் முகத்தைப் பார் - ஏழ்மையில்
உழலும் அக்குடியானவன்
உன்னால் பெறும் உற்சாகத்தைப் பார்.

மலைகளில் உன்னால்
உருவான ஆற்றைப் பார் - அதில்
உருளும் தோணிகளைப் பார் - நீரினில்
மீனினத்தைப் பார் - அதுவே வெட்க
மீன்விழியுடைய பெண்களைப் பார்.
மிக்க பொலிவுடன் அவர்கள்
மீதிலமர்ந்து சிரிக்கும் அக்
குழவிகளைப் பார் - மகிழ்ச்சியடை !

இதோ, -
ஓர் இளைய பாரதம் உன்
மோன வேள்வியில்
ஞானம் பெற வருகிறது. 

அன்புடன்
டி. ஜனார்த்தனன்



இதைப் படித்த அவர், மிகவும் உணர்ச்சி வயப்பட்ட நிலையில், " நல்லா .... நல்லா ... " என்று கூறி, என் இரு கரங்களையும் வலுவாகப் பற்றி, ஆசை தீர குலுக்கியது - என்னால் மறக்கவியலா ஸ்பரிசங்களில் ஒன்று. 

என் மன பதிவுகள் - 1990 - இருபது வருடங்களுக்கு முன்

எனக்கு பிடிக்காதவை

அழகான பெண் குழந்தை
படத்திற்கு தாடி மீசை போட்டு
இரசிக்கும் வக்கிரமானவர்களை.

குழந்தைகளை தலையில்
நங் ..... கெனக் கொட்டும்
ராட்சசிகளை, ......

குழந்தைகளை திமிறத் திமிற
உதட்டில் அழுந்த முத்தமிடும்
சுயநலக்காரர்களை, ........

குழந்தைகளுக்கு பின்பக்கத்தில்
நறுக் ......... கென ஊசி போடும்
அரக்க மருத்துவர்களை.

என்னனுமதியின்றி என்
கவிதைகளை படித்து விட்டு
கண்களால் என்னை அளவெடுப்பவர்களை.

என் கவிதைத் தொகுப்பில்
தனக்கு பிடித்த கவிதைகளை
குறியிடுபவர்களை, ...........
சபாஷ், பலே, அருமை
என்று எழுதும் ஞான சூன்யங்களை.

என் கவிதைத் தொகுப்பில்
சம்பந்தமில்லாத பொன்மொழிகளை
எழுதி தன் மேதா விலாசத்தை
வெளிப்படுத்தும் பிரகஸ்பதிகளை, ......

கொடுத்த வாக்கினை வேண்டுமென்றே
காப்பாற்றாமல் விடும்
மனதிடமற்றவர்களை.

உண்மையை சொல்
என்று சொல்லியும் பொய்களை
கூசாமல் சொல்லும் புளுகர்களை, ..........

நண்பனாய் எதிரில் நடித்து
பின்னால் தூற்றும்
சிநேகிதத் துரோகிகளை.

நான் என்னவோ அவர்களுக்காக
எழுதுவதாக நினைத்து என்
கவிதைகளை திருத்துபவர்களை

புதுப்பாதை, வெளிச்சம் என
தனக்கே புரியாத கவிதைகளை
எழுதும் புகார் கவிஞர்களை.

Saturday, March 12, 2011

என் மன பதிவுகள் - 1990 - இருபது வருடங்களுக்கு முன்

எனக்குப் பிடித்தவை

என் மன பதிவுகள் - 1990
( இருபது வருடங்களுக்கு முன் )

1) வளைந்து நிற்கும் பனைமரம்
கீழே சலசலக்கும் சிற்றோடை
பள்ளிக்குப் போக வேண்டுமென்பதை
மறந்து பிறந்த மேனியாய்
பனை மரத்திலிருந்து நீருக்குள்
பாயும் அந்த, ...............
வாலற்ற வானரங்களின்
சந்தோஷக் கூச்சல்.

2) நிறைய பூ பூத்து
செக்கச் செவேலென்று
பரவசத்துடன் சிரிக்கும்
செம்பருத்தி செடியினை
சுற்றிச் சுற்றி வரும்
வண்டின் ரீங்காரம்.
ஓ, .... இது
ஓர் இனிய விடியல்.

3) முதியவரின் கண்களில் சூன்யம்
கடந்த காலத்தை
அசை போடும்
அடிமாடு.

4) புகை வண்டியின்
'' புவ்வாங் ''
சத்தம் கேட்டும்
மெல்ல நடந்து போகும்
எருமையின் அறியாமை

5) முட்டை தேய்த்து குளித்த பின்
முகமெல்லாம் சிவந்து போய்
உடலெங்கும் மாவு பூசி
களைத்து போய்
'' ஊம் '' என்ற பெரு மூச்சுடன்
உறங்கும் அழகான
அரை நிர்வாணக் குழந்தையை
மெல்ல முகர்நது பார்ப்பது.
ஹூம், ........ என்ன வாசம் !

6) தளிர் நடை போடும்
சின்னஞ்சிறு குழந்தையின்
கொலுசுச் சத்தத்தை
கண்களை மூடிக் கொண்டு
அனுபவித்துக் கேட்பது.

7) அப்பா அம்மா விளையாட்டு.
இல்லையில்லை ! நிஜத்தின் நிழல் !
'' அண்ணே ! சாப்பிடறீங்களா ''
சிறுமியின் கண்களில் கெஞ்சல்.
பெரிய மனதுடன் இரங்கி
'' என்ன தருவே? '' என்று நான்.
அவசரமாய் இலை பறித்து
அதில் மணல் சோறிட்டு
தழைகளை கொட்டி கூட்டிட்டு
செங்கல் நீறூற்றி குழம்பிட்டு
'' ம், ..... ம் ..... சீக்கிரம் சாப்பிடுங்க
நிறைய வேலையிருக்கு ''

அந்த சின்னஞ்சிறு
பெரிய மனுஷியின்
உலகையே தாங்கும் பாவனை.

8) யானையைப் பார்த்து
'' அப்பாடி ! எவ்வளவு பெரிசு ''
என்று கன்னத்தில் காற்றடைத்து
கண்களை அகல விரிக்கும்
குழந்தையின் பிரமிப்பு.

9) கண்களில் கனவுடன்
கன்னத்திலே கை வைத்து
அலுவலகத்திலிருந்து திரும்பும்
அப்பாவை எதிர் நோக்கி
பிறந்த நாள் அன்பளிப்பாய் வரப்போகும்
சிறிய கரடிக்குட்டி பொம்மையைப்
பற்றிய இனிய கனவுகளுடன்
சிறுமி, .... வாயிற்படியருகே !

10) காலையில் இட்ட முட்டை
கடையிலே அவியலான
கதை தெரியாமல்
அப்போதைய வயிற்றுப் பசிக்கு
புழுச் செல்வத்தைத்
தேடியெடுக்கும் அந்த
வாத்துக் கூட்டத்தின்
குவாக், ..... குவாக்.

11) அடம் பிடிக்கும் குழந்தைக்கு
கெஞ்சிக் கூத்தாடி
சோறூட்டும் அம்மாக்களை.

12) பொட்டு பொட்டாய் விழும்
மழைத்துளியில் மெல்ல நனைந்து
சிலிர்த்திருக்கும் மண் தேவதை.
மெல்ல விரிந்திருக்கும்
மணற் பரப்பு, ........

13) இடியோசைக்கு பயந்து
ஓ, ....... வென
அலறும் பெண்களை

14) எனக்காகவா இதை
வாங்கினீர்கள் என்று
மதி மயங்கி கேட்கும்
மென்மையான பெண்மையை !

15) என் கவிதைகளைப் படித்து
மெல்ல புன்னகைப்பவர்களை

16) யாருமற்ற தனிமை !
இயற்கைச் செல்வங்களுடன்
நான், ........ தனிமையில்.

மெல்ல தலையை உயர்த்தி
என் நட்சத்திரக் காதலியுடன்
மெளன மொழியில் பேசி
கடிதம் எழுதுவது.

17) சிறு வயதிலேயே
சிருங்கார பாவம் காட்டி
பரதமாடும்
சின்னஞ்சிறு தேவகி.

18) எதிராளியின் அறிவுக் கூர்மை

19) இயற்கையின் இனிய வசந்தம்

20) கட்டுப்பாடுகள் நிறைந்த போராளிகள் வாழ்க்கை

21) கடமைகளுக்காக உயிர்த் தியாகம்

22) பாரதியின் நெருப்பு வரிகளை

23) நன்மையோ, தீமையோ உள்ளதை சொல்பவர்களை

24) ஆள் அரவமற்ற ஊரில்
தன்னந்தனியே இறக்கி விட்டுவிட்டு
சற்று தூரத்தில் சப்தமேயில்லாமல்
போகும் பேருந்தினைக் காண்பது.
ஏனென்று தெரியாமலே
ஓர் இனம் புரியாத சந்தோஷம்.